ஹைப்போக்ஸியா இருப்பவர்களின் சுவாச விகிதம் ஒரு நிமிடத்துக்கு 25-க்கு மேலிருக்கும். உதடு மற்றும் நாக்கு நீல நிறத்துக்கு மாறலாம். பல்ஸ் ஆக்ஸிமீட்டர் (Pulse Oximeter) என்ற சிறிய கருவி மூலம் அவர்களின் ஆக்ஸிஜன் செறிவடையும் தன்மை குறைந்துள்ளதை அறியலாம்.
வயதானவர்கள், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டுவந்த நிலையில், சமீபத்தில் நாள்பட்ட நோய் இல்லாதவர்களும் இளைஞர்களும்கூட கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதும், பலி எண்ணிக்கை அதிகரிப்பதும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
இத்தகைய இறப்புகளுக்கு ஹைப்போக்ஸியா (Hypoxia) என்று காரணம் சொல்கிறார்கள். ஹைப்போக்ஸியா என்றால் என்ன... ஹைப்போக்ஸியாவுக்கும் கொரோனாவுக்கும் என்ன சம்பந்தம்... போன்ற பல கேள்விகளையும் மருத்துவ நிபுணர்களிடம் கேட்டோம்.
நெஞ்சக மருத்துவர் சபரிநாத் ரவிசந்தர் பேசுகையில்...
சாதாரணமாக ஒருவருக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 95 சதவிகிதத்துக்கு மேல் இருக்க வேண்டும். கரியமில வாயு 70 முதல் 80 சதவிகிதம் இருக்க வேண்டும். ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு 90%-க்கு கீழ் குறைவதை ஹைப்போக்ஸியா என்கிறோம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஹைப்போக்ஸியா என்பது ஆபத்தான ஓர் அறிகுறி. ஹைப்போக்ஸியா உள்ள நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் இருக்கும்.
கொரோனா வைரஸ் தாக்குதலின்போது வைரஸ் தொற்றால் நுரையீரலில் காற்று பரிமாற்றம் ஏற்படும் இடத்தில் நீர் கோத்துக்கொண்டு, காற்று பரிமாற்றம் பாதிக்கப்படுகிறது. ரத்தத்தில் கலக்க வேண்டிய ஆக்ஸிஜன் அளவு குறைந்து ஹைப்போக்ஸியா ஏற்படுகின்றது.
மலை ஏறும்போதும், அதிக உயரமான இடங்களுக்குச் செல்லும்போதும், பாதாள குழிக்குள் செல்லும்போதும் ஹைப்போக்ஸியா ஏற்படும். நுரையீரலில் நீர் கோத்தல், இதயம் மற்றும் மூளை செயலிழப்பு ஆகியவற்றாலும் ஹைப்போக்ஸியா ஏற்படும். ஹைப்போக்ஸியா என்பது ஒரு நோய் அல்ல, அறிகுறி.
ஒருவருக்கு ஹைப்போக்ஸியா உள்ளதா என்று கண்டறிய ஒருவரின் சுவாச விகிதத்தைக் (Respiratory Rate) கணக்கிட வேண்டும். அது ஒரு நிமிடத்துக்கு 12 முதல் 18 வரை இருப்பது சரியானது.
ஹைப்போக்ஸியா இருப்பவர்களின் சுவாச விகிதம் ஒரு நிமிடத்துக்கு 25-க்கு மேலிருக்கும். உதடு மற்றும் நாக்கு நீல நிறத்துக்கு மாறலாம். பல்ஸ் ஆக்ஸிமீட்டர் (Pulse oximeter) என்ற சிறிய கருவி மூலம் அவர்களின் ஆக்ஸிஜன் செறிவடையும் தன்மை குறைந்துள்ளதை அறியலாம்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களும் பல்ஸ்ஆக்ஸி மீட்டர் மூலம் தங்களின் ஆக்ஸிஜன் செறிவடையும் தன்மை குறைவதைக் கண்காணித்து மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்கலாம். ஹைப்போக்ஸியா நிலையைச் சீராக்க நோயாளிக்கு வெளியிலிருந்து ஆக்ஸிஜன் கொடுப்பது அவசியம். ஆக்ஸிஜன் செலுத்துவதற்கென உள்ள பிரத்யேக மாஸ்க் (Simple face masks) மூலமாகக் கொடுக்கப்படும் ஆக்ஸிஜன், அவரை குணமாக்கவில்லை என்றால் வென்டிலேட்டர் மூலம் கொடுக்க வேண்டும். இதய கோளாறால், ஹைப்போக்ஸியா ஏற்பட்டவர்களுக்கு இதயத்தின் செயலைச் சீராக்க மருந்துகள் வழங்க வேண்டும். ரத்தச்சோகையால் ஹைப்போக்ஸியா ஏற்பட்டவர்களுக்கு ரத்தம் ஏற்றினால் குணமாகிவிடும்.
ஹைப்போக்ஸியாவை நீண்ட நேரம் நீடிக்கவிட்டால் ஆக்ஸிஜன் குறைபாட்டால், பல்வேறு உறுப்புகள் செயலிழக்க ஆரம்பித்து விடும். இதில் மிக முக்கியமானது மூளை. மூளைக்கு 3 முதல் 6 நிமிடங்கள்வரை ஆக்ஸிஜன் இல்லை என்றாலே அது செயலிழந்துவிடும்.
கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாலும் சுவாச விகிதம் அதிகரித்தல், அதிகமாக மூச்சு வாங்குதல் மற்றும் உதடு, நாக்கு நீல நிறமாக மாறுதல் ஆகிய அறிகுறிகளைக் கண்காணிக்க வேண்டும்.
வீட்டிலேயே பல்ஸ் ஆக்ஸி மீட்டர் வைத்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஆக்ஸிஜன் செறிவடையும் தன்மையைக் கண்காணிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் ஹைப்போக்ஸியாவால் ஏற்படும் மரணத்தைத் தவிர்க்கலாம். வசதி இருப்பவர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர், ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர் போன்ற கருவிகளை வாங்கி வைத்துக் கொள்ளலாம். வீட்டிலேயே ஹைப்போக்ஸியா ஏற்படும் நிலையில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வரை உயிரைப் பாதுகாக்க இந்தக் கருவிகள் உதவலாம்" என்று கூறினார் மருத்துவர் சபரிநாத்.
அவசரகால சிகிச்சை மருத்துவர் தவபழனி இதுகுறித்துக் கூறுகையில்,
''கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்புக்கு ஹைப்போக்ஸியா பரவலான காரணமாக உள்ளது.
ஹைப்போக்ஸியா என்பது ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பது. நுரையீரலிலுள்ள ஆல்வியோலையில் (Alveoli) நீர்கோப்பதால் நுரையீரல் கடினமானதாக மாறிவிடுகின்றது.
கொரானா வைரஸ் தொற்றுள்ள நோயாளிகளைப் பொறுத்தவரை ஹைப்போக்ஸியாவால் வரும் விளைவுகளை அவர்களால் எளிதில் உணர முடிவதில்லை.
கோவிட்-19 நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் தாமதமாக வருகிறது. இவர்களால் ஹைப்போக்ஸியாவை நன்கு பொறுத்துக் கொள்ள முடிகிறது. கொரோனா வைரஸால் ஏற்படும் கோவிட் நிமோனியா காரணமாக ஏற்படும் ஹைப்போக்ஸியாவை 'ஹேப்பி ஹைப்போக்ஸியா' (Happy Hypoxia/Silent Hypoxia) என்று கூறுகின்றனர்.
மற்ற நோய்களினால் ஹைப்போக்ஸியா ஏற்பட்டால் அவற்றின் விளைவுகள் உடனே தெரிந்துவிடும். கோவிட் 19 தொற்று விஷயத்தில், பாதிப்புக்குள்ளானவர்கள், ஹைப்போக்ஸியாவை பொறுத்துக்கொள்வதால், மூளை மற்றும் இதர உறுப்புகளுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் குறைந்து மரணம் ஏற்படுகின்றது.
உடல் நலத்துடன் இருப்பவர்களுக்கு ஆக்ஸிஜன் செறிவடையும் தன்மை 94 சதவிகிதத்திற்கும் மேல் இருக்கும். சில கொரோனா நோயாளிகள் 75 சதவிகிதம் ஆக்ஸிஜன் செறிவடையும் தன்மையுடன் நடந்து வருவதையே பார்த்துள்ளோம். ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைந்த பின்னரே மூச்சுத் திணறல் ஏற்படுகின்றது. ஆக்ஸிஜனை பலவகையில் கொடுப்பதே ஹைப்போக்ஸியாவுக்கான சிகிச்சை ஆக்சிஜன் மாஸ்க், சி பாப், பை பாப் (CPAP, BiPAP) போன்ற வழிகளில் ஆக்ஸிஜன் வழங்கலாம்.
கடைசி நிலையில் வென்டிலேட்டர் உதவியில் நோயாளிகள் வைக்கப்படுகிறார்கள். அந்தக் கட்டத்தில் நோயாளிகளின் இறப்பு விகிதம் அதிகம்" என்று கூறுகிறார் மருத்துவர் தவப் பழனி.
நன்றி- விகடன்