இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கண்டறியும் PCR பரிசோதனைகளை அதிகரிப்பதற்கு இலங்கை சுகாதார அமைச்சு முடிவெடுத்துள்ளது.
இதுவரை இலங்கையில் 13 அரச பரிசோதனை மையங்களில் தான் PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த 13 பரிசோதனை நிலையங்கள் மூலம் ஒரு நாளில் 600 பேரை மாத்திரமே பரிசோதிக்க முடியும்.
கொரோனாவை கண்டறியும் PCR பரிசோதனையை ஒரு நாளைக்கு 1,000 ஆக அதிகரிப்பதற்காக தனியார் வைத்தியசாலை பிரதானிகளுடன் இன்று (23) சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பேச்சுவார்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் பின்னர் ஆசிரி ஹொஸ்பிடல்ஸ், டேடன்ஸ், நவலோக மற்றும் லங்கா ஹோஸ்பிடல்ஸ் ஆகிய மருத்துவ மனைகளும் PCR பரிசோதனையை மேற்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளன.
சேகரிக்கப்படும் மாதிரிகளில் தனியார் வைத்தியசாலைகளில் நாளொன்றுக்கு தலா 100 மாதிரிகள் வரை PCR பரிசோதனைக்கு உட்படுத்த முடியும் என்றும் அதன் மூலம் நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் அதிகமான பரிசோதனைகளை இலங்கையில் மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.