பொதுத் தேர்தலை எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி நடத்தத் தீர்மானித்து அதற்கான விசேட வர்த்தமானியை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிலையில், புதிய பாராளுமன்றம் கூடும் திகதியை அறிவிக்கும் விசேட வர்த்தமானியை வெளியிட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
இதனடிப்படையில் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த வர்த்தமானி வெளியாகவுள்ளது.
முன்னதாக மார்ச் 2 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி அதனை விசேட வர்த்தமானியில் அறிவித்திருந்தார். பின்னர் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.
அதனையடுத்து புதிய பாராளுமன்றத்தை மே 14 ஆம் திகதி கூட்ட ஜனாதிபதி அறிவித்தல் விடுத்திருந்தார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதியிலிருந்து ஜூன் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ள நிலையில் புதிய பாராளுமன்றத்தை கூட்டும் புதிய திகதியை அறிவிக்கவுள்ளார் ஜனாதிபதி.
அநேகமாக ஜூலை 9 அல்லது 10ஆம் திகதி புதிய பாராளுமன்றம் கூட்டப்படலாமென தெரிகிறது.
நீதிமன்றம் செல்ல முயன்றோருக்கு முட்டுக்கட்டை
இதேவேளை ஜூன் 2 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென்ற ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய அது கூடாத பட்சத்தில் - 3 மாத கால எல்லையை தாண்டியதால் பாராளுமன்றம் கூடலாமென்று தெரிவித்து சில தரப்புகள் நீதிமன்றம் செல்ல முயன்று வருகின்றன.
ஆனால் புதிய பாராளுமன்றம் கூடுவதற்கான திகதியை ஜனாதிபதி அறிவித்தால் அதனை நீதிமன்றம் சவாலுக்குட்படுத்துமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
எவ்வாறாயினும் ஜூன் 20 ஆம் திகதியும் தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் அப்போது ஒரு அரசியல் நெருக்கடி ஏற்படலாமென தெரிகிறது