உலகிலுள்ள 34 விசேட நிபுணத்துவம் பெற்ற சுகாதார உத்தியோகத்தர்களை ஆலோசகர்களாகக் கொண்ட உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனாவினால் இறப்பவர்களின் உடலை எரிக்கவும் முடியும் புதைக்கவும் முடியும் என பரிந்துரைத்திருப்பதனூடாக புதைப்பது உயிருடனுடனிருப்பவர்களுக்கு எந்தவித சுகாதார பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதில் உறுதியாகவுள்ளது.
முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் படித்துக்கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்ற தீய எண்ண சந்தோசத்துடன் “இலங்கை சுகாதார பிரிவு சர்வதேச சட்ட நியமனங்களுக்கிணங்க கொரோனா உடலை தகனம் செய்கிறது” என இலங்கையின் சுகாதாரப்பிரிவின் செயற்பாட்டை ஒவ்வொரு செய்திகளிலும் நியாயப்படுத்துவதையே சிங்கள ஊடகங்கள் அன்றாட வேலையாக திட்டமிட்டு செய்கிறன.
கட்டாய தகனத்திற்கான விளக்கத்தை சம்பந்தப்பட்டவர்களான சுகாதாரப்பிரிவிடம் கேட்டால், “உடலிலுள்ள கிருமிகள் மண்ணினூடாக நில நீருடன் கலந்து மையவாடிகளின் சூழலிலுள்ள மக்களை பாதித்துவிடும்” என்பதால் புதைப்பதற்கு பதிலாக எரிப்பதை கட்டாயமாக்கியதாக விஞ்ஞானத்திற்கப்பாற்பட்ட விளக்கத்தைக் கூறியதுமில்லாமல் 3 முஸ்லிம்களின் உடல்களை எரித்தபின் தமது செயற்பாட்டை நியாயப்படுத்துவதற்கு சட்ட பாதுகாப்பு கருதி அண்மையில் அதி விசேட வர்த்தமானி மூலம் கட்டாய தகனத்திற்கான பாரபட்சமான ஒழுங்குவிதியையும் அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
கொரோனாவை கையாளுதல் தொடர்பில் உலகிலுள்ள மிகச்சிறந்த நிபுணத்துவ வைத்திய ஆராய்ச்சியாளர்களினால் உருவாக்கப்பட்ட பரிந்துரைகளை உலக சுகாதார அமைப்பு வழிகாட்டியாக எமக்குப்பரிந்துரைத்தாலும் எமது நாட்டின் மண்ணின் தன்மை மற்றும் மக்களின் சுபாவம் எமக்குத்தான் நன்கு தெரியும் எனவே உள்நாட்டுச்சூழலுக்கேற்றவகையில் தான் நாம் செயற்படுவோம் என இலங்கையின் பொது சுகாதார பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜெயசிங்க தனது முடிவில் உறுதியாகவிருக்கிறார்.
வைத்திய சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கட்டாய தகனத்திற்கான பரிந்துரையானது சர்வதேச நியமனங்கள் மற்றும் உள்நாட்டு தொற்று நோய் தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு முரணானது என இலங்கை அரச வைத்தியர்கள் சங்கம்(GMOA) பொது சுகாதார பணிப்பாளர் அனில் முணசிங்கவிற்கு தெரிவித்திருந்த போதிலும் அதனையும் அவர் கணக்கிலெடுக்கவில்லை.
இது தொடர்பில் எமது சமயத்தலைவர்கள் எரித்தபின் அந்த “சாம்பலை என்ன செய்வது” என கருத்துச் சண்டையிலீடுபடுகின்றனர்.
எதிர்வரும் தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராக பேசுவதற்கு ஒன்றுமில்லாது இருந்த எமது அரசியல்வாதிகள் இந்த விடயத்தை பற்றிப்பேசி முஸ்லிம்களின் உணர்ச்சியை தூண்டிவிட்டு அதனூடாக வாக்கறுவடையை மேற்கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பமாக இவ்விடயத்தை கருதி மனதிற்குள் சந்தோசப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.அதற்கு ஒருபடி மேலே போய் இவ்வளவு பிரச்சினைகளை முஸ்லிம்கள் எதிர்கொண்டிருக்கும் போது தற்போது நோன்பு கஞ்சில் கைவைத்துப்பார் என வீராப்பு பேசுது ஒரு அரசியல் வெங்காயம்.
சமூக ஆர்வளர்களான சட்டத்தரணிகளோ ஆளும் ஆட்சியாளர்களுடனிருக்கும் பிரபல சிரேஷ்ட சட்டத்தரணி பாயிஷ் முஸ்தபாவின் மகனாராகிய ஜனாதிபதி சட்டத்தரணி பைசல் முஸ்தபா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி போன்றவர்களுக்கு தெரியாத சட்டங்களா எமக்குத்தெரியுமென அமைதியாகியுள்ளனர் மேலும் ஒரு சிலர் இதற்காக வழக்கு பேசுவதற்கு நீதிமன்றத்திற்கு போகாமல் வழக்குச்செலவை செய்வதற்கு வெளிநாடுகளில் வேலை செய்பவர்களிடம் பிச்சையெடுப்பதாக ஒரு தகவல்.
ஊடகங்களோ கொரோனாவை இலங்கைக்கு கொண்டுவந்ததுமில்லாமல் அதனை பரப்பித்திரிபவர்களும் போடும் ஊரடங்குச்சட்டத்திற்கு (இல்லாத சட்டத்திற்கு)கட்டுப்படாதவர்கள் முஸ்லிம்களே! என தமது பொறாமைத்தீயை அன்றாடம் பற்றவைத்துக்கொண்டேயிருக்கின்றன.
இனத்துவேச ஊடகங்களுடன் போட்டி போடக்கூடிய எமக்கான ஊடகமொன்று இல்லாமலிருப்பது எமக்கிருக்கும் ஒரு பெரும் குறையே!.
எமது செல்வந்தர்களோ பல கோடி ரூபாய்களை கொரோனா நிதிக்காகவும் அத்தியவசிய தேவைகளுக்காகவும் சாதி இனம் பாராமல் அரசாங்கத்திற்றகு வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.
விடயத்திற்கு வருகிறேன் அரச வைத்தியர்கள் சங்கம் கூறுகின்றதும் சுகாதார பிரிவு மீறியுள்ளதுமான சர்வதேச நியதிகள் மற்றும் உள்நாட்டுச்சட்டங்கள் என்ன ? என்பதைப்பார்ப்போம்.
இலங்கையரசானது ஐக்கிய நாடுகள் சபையில் 1955ல் இணைந்துகொண்டு அதன் 111 உறுப்புரைகளைக்கொண்ட ஐக்கிய நாடுகள் பட்டயத்தையும் ஏற்றுக்கொண்டது.
இந்த பட்டயத்தின் பிரதான நோக்கம் ஆண் பெண் எனவுள்ள இரு இனங்களை மாத்திரம் கொண்ட மனிதர்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தி அவனை மனிதனாக வாழ வைத்து அதனூடாக உலகில் எதிர்காலத்தில் 1ம் 2ம் யுத்தங்களைப்போன்ற யுத்தமொன்று மீண்டும் உருவாகிவிடாமல் மக்களை பாதுகாப்பதேயாகும்.
அதற்காக செயற்படுகின்ற பல விசேட முகவர் நிறுவனங்களை உருவாக்கிய ஐக்கிய நாடுகள் சபையானது உலகமக்களால் வழங்கப்படுகின்ற நிதியினை அவற்றிற்கான செயற்பாடுகளுக்கு வழங்கிவருகிறது. அந்நிதிகளை குறித்த விசேட முகவர் அமைப்புகளிடமிருந்து பெறும் அரசாங்கங்கள் தமது மக்களின் நலனுக்காக அதனை செலவிடுகின்றன.
அவ்வாறு செயற்படுகின்ற ஐ நாவின் துணைநிலை அமைப்புக்களின் ஒன்றுதான் உலகசுகாதார அமைப்பாகும்(World Health Organization).இது 1948ல் உருவாக்கப்பட்டது.
இதன் தற்போதைய பணிப்பாளர் நாயகமாக எதியோப்பிய நாட்டவரான Tedros Adhanon என்பவர் செயற்படுகிறார்.
இவ்வமைப்பில் இலங்கை அரசானது அதன் யாப்பை பின்பற்றுவதாக உறுதியளித்து ஒரு அங்கத்தவராகியுள்ளது.
இவ்வமைப்பின் யாப்பில் “ஒவ்வொரு அங்கத்துவ நாடும் அதனது நாட்டு பிரஜையினது உடல் உள நலனை மேம்படுத்த அவர்களது ஒத்துழைப்புடன் சுகாதார சேவையை முன்னெடுக்கவேண்டும் என்பதுடன்
சுகாதார சேவையினை இன,மத, அரசியற்கொள்கை ,பொருளாதார ்அல்லது சமூக அந்தஸ்த்து போன்றவற்றினால் பாரபட்சம் காட்டப்படாமல் பிரஜைகளின் அடிப்படை உரிமையாக கருதி ஒவ்வொரு அரசுகளும் தனது பிரஜைகளுக்கு வழங்க வேண்டும்” குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கருத்திற்கொண்ட சிலர் இலங்கை அரசாங்கத்தின் கட்டாய தகனத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபைக்கு பல முறைப்பாடுகளை செய்துள்ளனர்.
இந்த முறைப்பாடுகளை ஐக்கிய நாடுகள் சபை கவனத்தில் எடுக்குமா ? என்பதை பார்ப்போம்.
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான ஆலோசனை நிறுவனங்களில் ஒன்றாகியதும் மனித உரிமைகள் பிரகடனத்தின் 30 உறுப்புரைகளையும் நடைமுறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது தான் சர்வதேச மனித உரிமைகள் குழு.
இக்குழுவானது வருடத்திற்கு மூன்று முறை நியூயோர்க்கில் அல்லது ஜெனீவாவில் கூடும்.
எதாவது மனித உரிமைகளை உலகிலுள்ள ஏதாவது அரசு மீறுகின்றபோது அது சம்பந்தமான முறைப்பாட்டினை தனிநபர்கள் அல்லது தனிநபர்கள் சார்பாக அரச சார்பற்ற அமைப்புக்களும் இவ்வமைப்புக்கு முறையிடலாம்.
இவ்வாறு முறையிடும் வசதியை 1997ல் எமது அரசும் எமக்கு ஏற்படுத்தி தந்துள்ளது.
ஆனால் சர்வதேசத்திற்கு இவ்விடயத்தை கொண்டு போகுமுன் இந்த மனித உரிமை மீறல் முறைப்பாட்டை இலங்கையின் நீதித்துறையின் கவனத்திற்கு கொண்டு வந்து அத்துறையும் எமக்கான நியாயத்தை மறுத்திருக்க வேண்டும்.
அப்போது தான் சர்வதேச மனித உரிமைக்குழு குறித்த முறைப்பாட்டை கவனத்தில் எடுத்து அதனை ஐநாவின் பொதுச்சபையின் கவனத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணத்தை வழங்குவதுடன் மீறிய அரசாங்கத்தினை கண்டிக்கும்.
அப்படியானால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படவிருக்கும் எமது சகோதரர்களுக்கு உள்நாட்டிலிருக்கும் சட்ட பரிகாரங்கள் என்னவென பார்ப்போம்.
தகனம் செய்யப்பட்ட 3 முஸ்லிம் சகோதர்களின் குடும்ப உறுப்பினர்களும் உடலை தகனம் செய்வதற்கான விருப்பத்தை கையொப்பமிட்டு இணங்கியிருந்தால் இவர்களுக்கான உரிமைகளைகளை நிலை நிறுத்துவது இலகுவான விடயமல்ல .
எமது நாட்டின் 1899ம் ஆண்டின் சுடலைகள் மற்றும் அடக்கஸ்தலங்கள் கட்டளைச் சட்டத்தின் (Cemeteries and Burial Grounds Ordnance)பெயருட்பட அனைத்துப்பிரிவுகளும் அடக்குவதற்கும் தகனத்திற்கும் அனுமதியளித்துள்ளன.
Quarantines and prevention of Disease ordinance சட்டத்தின் பிரிவு 3(1)(i) படி சுகாதார அமைச்சர் நோயினால் இறக்கும் நபரை எரிப்பதற்கான அல்லது புதைப்பதற்கான விதத்தை (mode) பரிந்துரைக்கும்ஒழுங்குவிதிகளையாக்கலாம் எனக்கூறப்பட்டுள்ளது.
3.(1)(i).For prescribing the mode of burial or cremation of any person dying of disease.
எவ்வாறு புதைக்கலாம் அல்லது எரிக்கலாம் எனும் செயல்முறைகளை மாத்திரமே ஒழுங்குவிதிகளாக சுகாதார அமைச்சர் ஆக்கலாம்.
இந்த கட்டளைச்சட்டம் அமுலுக்கு வந்ததிலிருந்து காலத்திற்குக்காலம் பல்வேறு ஒழுங்கு விதிகளை (Regulations)சுகாதார அமைச்சர்கள் உருவாக்கியுள்ளனர்.
மேற்கூறப்பட்ட ஒழுங்கு விதிகளின் பிரிவு 60,61 மற்றும் 62 ஆகியவை தொற்று நோயால் இறப்பவர்களின் உடல்களை எவ்வாறு கையாளுதல் மற்றும் தொற்று நோயாளர்கள் பொது இடங்களில் நடமாட்டத்தை எவ்வாறு கட்டுபடுத்துதல் என்பதை விரிவாக விபரிக்கின்றன.
60.-நோயினால் இறக்கும் நபர்களின் சடலங்கள் -
வைத்தியசாலையின் எல்லைக்குள் அல்லது தனிமைப்படுத்தல் தடுப்புமுகாம் தவிர்ந்த ஒரு வீட்டில் ஒருவர் தொற்று நோயால் இறந்தால் உடலை அடக்குவதற்கு அல்லது தகனம் செய்வதற்கு தயார் செய்வதற்கான கடமைகளை செய்வதற்காக முறையான அதிகாரியின் பரிந்துரைப்படி செயற்படுபவர்கள் பாரமெடுக்கும்வரை உறவினர்கள் இறந்தவரின் உடலைத்தொடக்கூடாது. மேலும் வருபவர்கள் தங்களை எவ்வாறு தொற்றுநீக்கிக்கொள்வது,உடலின் உடைகள் மற்றும் அதன் சூழலை எவ்வாறு தொற்றுநீக்குவது அவ்வாறு தொற்றுநீக்குவதன் தேவைப்பாட்டை உறவினர்களுக்கு எவ்வாறு விளங்கப்படுத்துதல் என்பவற்றை முறையான அதிகாரி வழிகாட்டல்களில் வந்தவர்கள் செயற்படுத்தலாம் அத்துடன் உடலை தூக்கிச்செல்பவர்களை முழுமையாக தொற்று நீக்கத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
61.-சடலங்களை அகற்றுதல்,தொற்றுநீக்குதல் மற்றும் அடக்கம் செய்தல்-
முறையான அதிகாரியினால் அங்கிகரிக்கப்பட்ட இடம் தவிர்ந்த இடங்களில் அடக்க முடியாது. தொற்று நீக்குதல் தொடர்பான கட்டளையையாக்குதல், உடலை கொண்டு செல்லும் பொது பாதையை நிர்ணயித்தல் குறித்துரைக்கப்பட்ட புதைக்குமிடங்களில் அல்லது எவ்வளவு ஆழத்தில் புதைப்பதை அமுல்படுத்தல் ஆகியவற்றுக்கான கட்டளைகளை முறையான அதிகாரி வழங்கலாம்.
62.-தொற்று நோயாளர்கள் பொது வீதி மற்றும் பொது இடங்களுக்குப்போவதை தடைவிதித்தல்-
முறையான அதிகாரியின் அனுமதியின்றி தொற்று நோயாளர் வெளிநாடு செல்வதற்காக வீட்டிலிருந்து ்அல்லது தானிருக்குமிடத்திலிருந்து எந்த பொதுப்பாதைக்குள் உட்பிரவேசிக்கக்கூடாது அத்துடன் முறையான அதிகாரியின் அனுமதியின்றி எந்தவொரு தொற்று நோயாளியையும் அவரது இடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு இடமாற்றக்கூடாது.(தற்போது இலங்கையிஇ்ந்தப்பிரிவைப் பயன்படுத்தி பொலிசார் இல்லாத ஊரடங்குச்சட்ட மீறுகையென பலரைக் கைது செய்து வழக்கிட்டுள்ளனர்.)
இங்கு முறையான அதிகாரி (proper Authority)என்பது இலங்கைத்தீவு முழுவதுக்குமாக சுகாதார சேவைப்பணிப்பாளர் நாயகமும் உள்ளூரதிகாரசபையின் நகரபிதா,தவிசாளர் அல்லது சுகாதார மருத்துவ அலுவலர் துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்களாயின் அதன் பணிப்பாளர்களையும் அல்லது மருத்துவ அலுவலர்களையும் தடுப்பு முகாம்களிலுள்ள மருத்துவ அலுவலர்களையும் குறிக்கும்.
கொரோனா இலங்கையில் பரவ ஆரம்பித்ததிலிருந்து சுகாதார அமைச்சர் தனிமைப்படுத்தல் தொற்றுநோய் தடுத்தல் கட்டளைச்சட்டத்தின் கீழ் தனக்கிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் பல ஒழுங்குவிதிகளையாக்கினார்.
உலகின் புதிய தொற்று நோயாகிய கொரோனாவை தொற்று நோயாக இருக்கும் சட்டத்திற்குள் உள்வாங்கியமை,முக கவசத்தின் அதிகபட்சவிலைகளை நிர்ணயித்தமையுடன் அதன் ஏற்றுமதியை தடைசெய்தமை மற்றும் முறையான அதிகாரிகளை அடையாளப்படுத்தியமை ஆகியவற்றை சுகாதார அமைச்சர் ஒழுங்குவிதிகளாக அதிவிசேட வர்த்தமானிமூலம் சட்டமாக்கினார்,
“3 முஸ்லிம்களின் சடலங்களையும் எந்தவித சட்ட ஒழுங்குவிதிகளுமில்லாமல் எரித்துவிட்டீர்களே” என்று நாம் கொதித்த போது எரித்த சில நாட்களில் அதாவது 11/04/2020 ல் அதி விஷேட வர்த்தமானி மூலம்
“61A எனும் ஒழுங்குவிதியின் பிரிவினை புதிதாக உட்புகுத்தி
மேற்கூறப்பட்ட பழைய ஒழுங்கு விதியான உடலை புதைக்கும் ஒழுங்கைக்கூறும் 61 பிரிவு மற்றும் (இறந்த உடலைக்கையாளுதல் சம்பந்தமாக எதுவித தொடர்பற்ற பிரிவான தொற்று நோயாளியை பொது இடங்களில் தடைசெய்யும்) 62 பிரிவில் எது எப்படியிருந்தாலும் கொரோனாவினால் இறந்தவரை எரித்து அதன் சாம்பலை உறவினரிடம் கையளிக்கும் ஒழுங்கு விதியை அமைச்சர் அவசர அவசரமாக ஆக்கினார்.
பிரதான தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடக்குவதற்கும் தகனம் செய்வதற்கும் அனுமதிவழங்கியிருந்த போதிலும் தகனத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற “செய்முறையை (Mode) விபரித்த அமைச்சர் அடக்குதல் சம்பந்தமாக எதுவும் கூறாமல் முஸ்லிம்களின் சமய உரிமையினை மீறி முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டியுள்ளார்.
எமது அரசியல் யாப்பின் 12(2)படி இனம்,மதம்,மொழி,சாதி,பால்,அரசியல் கொள்கை ்அல்லது பிறப்பிடம் காரணமாக எந்தப்பிரஜைக்கும் பாரபட்சம் காட்டக்கூடாது.
அத்துடன் 14(1)E ன் படி ஒவ்வொரு பிரஜையும் தனியாகவோ அல்லது ஏனையவர்களுடன் சேர்ந்து தனது மதத்தையோ அல்லது வழிபாட்டிலும்,அனுசரிப்பிலும் சாதனையிலும் போதனையிலும் வெளிக்காட்டுவதற்கான உரிமையைக்கொண்டுள்ளார் எனக்கூறப்பட்டிருப்பதால் அடக்கல் எனும் வணக்கவழிபாட்டை அரசாங்கம் மீறியமையால் பாதிக்கப்பட்டவர்கள் அடிப்படையுரிமை வழக்கொன்றை ஒரு மாதத்திற்குள் உயர்நீதிமன்றில் தொடுத்து தகுந்த நிவாரனத்தைப்பெற்றுக்கொள்ளலாம்.அங்கு நிவாரணம் கிடைக்காவிட்டால் சர்வதேச மனித உரிமை குழுவுக்கு முறைப்பாடொன்றை செய்து அரசாங்கத்திற்கு ஒரு கரும்புள்ளியைக்குற்றலாம்.
உறுப்புரை 15(7)ன்படி மக்களின் சுகாதாரத்திற்காக மேற்கூறப்பட்ட உரிமைகளில் மட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கத்திற்கு அதிகாரமிருக்கிறது என மெத்தப்படித்த மேதாவிகளின் மன எண்ணவோட்டம் எனக்குப்புரிகிறது.
அப்படியான சட்டரீதியான மட்டுப்பாடுகளை அரசாங்கம் இன்றுவரை அவசரகால விதிகளைப்பயன்படுத்தி செய்யவில்லை என்னும் விளக்கத்தை எனது இன்னுமொரு ஆக்கத்தில் எதிர் பாருங்கள்.
இஸ்லாத்தை எவ்வளவுதான் விளங்கப்படுத்தினாலும் எமது சமூகம் ஒரு முஸ்லிமின் கடைசி முடிவாக தகனம் செய்யப்படுவதை அது ஒருபோதும் விரும்பாது.
ஒரு வேளை கொரோனா தொற்று தனக்கிருந்தாலும் அதனை சுகாதார பிரிவினருக்கு அறிவித்து தான் இறந்த பின் தனது உடல் 800-1200 செல்சியல் ஹீட்டில் 45 நிமிடங்கள்-ஒருமணித்தியாலயம் வரை எரித்து தனது சாம்பலை குடும்பந்தினரிடம் கொடுத்து விடுவார்கள் எனப்பயப்படும் ஒரு முஸ்லிம் தனது நோயை வெளிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு தொற்றுவதற்கு காரணமான சட்டத்தை கொண்டு வந்தவர்கள் யார்?
உண்மைக்குப் புறம்பாக பேரினவாத ஊடகங்களால் திரிவுபடுத்திக்காட்டப்படுவது போன்று தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்புச்(Qurantine and prevention of Disease Ordinance ) சட்டத்தை கவனத்திலெடுக்காதவர்கள் முஸ்லிம்களா???
சட்டத்தரணி சறூக் - கொழும்பு