கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இறப்பவர்களை புதைக்கலாமா? அல்லது எரிக்கலாமா? என்ற சுகாதார மற்றும் பாதுகாப்பு சார்ந்த சர்சையொன்று இலங்கையில் உண்டாகியுள்ளது.
கொரோனாவில் மரணிப்பவர்களை எரிக்க வேண்டும் என அரசு முடிவெடுத்து அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் விடுத்துள்ளது.
இலங்கை மக்களின் ஒரு பிரிவினரின் மத நம்பிக்கைகளுடன் அரசின் இந்தத் தீர்மானம் ஒத்துப் போகவில்லை. அந்த சமூகத்தை இது கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக முஸ்லிம் சமூகம் அரசின் இந்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளது.
கொரோனா பரவலின் படிமுறை மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் விஞ்ஞான நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பரிசீலிப்பது அரசாங்கத்தின் கடமை என தேசிய சமாதான பேரவை நம்புகின்றது.
கொரோனாவில் மரணித்தவர்களை அடக்காமல் எரிக்க மட்டுமே வேண்டும் என்ற அரசின் நிலைபாடு உலக சுகாதார நிறுவனத்தின் விதப்புரைகளுக்கு மாற்றமாக இருக்கின்றது.
அதாவது கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடலை எரிக்கலாம் அல்லது புதைக்கலாம் என்பதும் சகல நாடுகளிலுமே இதுவே இருக்கும் நடைமுறையாகும் என்பதும் உலக சுகாதார நிறுவனத்தின் நிலைபாடாகும்.
கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் சகல நாடுகளும் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே உலக சுகாதார நிறுவனத்தின் நிலைபாடாகும்.
கொரோனாவில் மரணித்தால் தமது அன்புக்குறியவர்களின் இறுதிக் கிரியைகளை உரிய முறையில் செய்ய முடியாமல் போகலாம் என்பதால் கொரோனா வைரஸ் குறித்து அறிவிப்பதற்கு குடும்பத்தினரும் சமூகங்களும் அச்சப்படும் நிலைக்கு தள்ளப்படுவதற்கு கொரோனாவில் மரணித்தவர்களின் உடல்களை அழிக்கும் வழிமுறைகள் வழிவகுக்கலாம் என்பதையும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் ஒழுங்கு விதியிலிருந்தும் அரசு வெளியிட்ட முதலாவது ஒழுங்கு விதியிலிருந்தும் அரசு விலக விரும்பியிருந்தால் முஸ்லிம் சமூகத்தின் மருத்துவத் துறை சார்ந்த விஞ்ஞானிகள் உள்ளிட்ட தலைவர்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும்.
அப்படி செய்திருந்தால் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி நிலைமைகளை கையால்வதாக இருந்திருக்கும்.
எனவே கொரோனாவில் மரணிப்பவர்களின் உடல்களை அழிப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து இறுதியாக கிடைக்கப்பெரும் விஞ்ஞான ஆய்வுகளுக்கு அமைவாக மறுபரிசீலனை செய்வதற்கு அரசு முன்வர வேண்டும் என தேசிய சமாதான பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது.