
Tuesday, December 16, 2025
Monday, December 15, 2025

மொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடுவது நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் எம்.பி
நாட்டிலுள்ள மொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அதேவேளை தவறு செய்வோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேணடும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பாக முறைப்பாடு செய்யுங்கள் என்ற தொனிப்பொருளில் சில செய்திகள் ஊடகங்களிலும், சமுக வலைத்தளங்களிலும் அண்மைக்காலமாக பரவி வருகின்றது.
இதனை வாசிப்போர் எல்லா கிராம உத்தியோகத்தர்களும் தவறு செய்கின்றனர் என்ற மனப்பதிவைப் பெறுகின்றனர். இதனால் நேர்மையான கிராம உத்தியோகத்தர்கள் பலர் பெரும் மனக் கவலை அடைந்துள்ளனர்.
பெரும் இன்னல்களுக்கு மத்தியிலேயே கிராம உத்தியோகத்தர்கள் பணி புரிகின்றனர். சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் கூட உள்ளன.
அனர்த்த காலத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் ஒருசில நாட்களில் கிராம உத்தியோகத்தர் நேரில் சென்று அவதானிப்பது என்பது சிரமமான காரியம். மனச்சாட்சியுள்ள எவரும் இதனை ஏற்றுக் கொள்வர்.
அரசியல்வாதிகள் மக்களைக் கவரும் வகையில் ஊடகங்களில் அறிக்கை விடுகின்றனர். ஆனால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் சில மட்டுப்பாடுகள் உள்ளன.
எனவே கிராம உத்தியோகத்தர்கள் அரசியல்வாதிகளின் அறிக்கைக்கேற்ப செயற்படுவதா, சுற்றறிக்கைக்கேற்ப செயற்படுவதா என்ற கேள்வி உள்ளது.
சுற்றறிக்கையை மீறி அரசியல்வாதிகளின் செய்திகளுக்கேற்ப செயற்பட்டால் கணக்காய்வு திணைக்களத்தின் நடவடிக்கைக்கு ஆளாகும் நிலை உள்ளது.
இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தமது தொழிலையும் பாதுகாக்கும் வகையிலேயே கிராம உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டியுள்ளது.
எனவே, அறிக்கைகள் வெளியிடுவோர் தவறு செய்வோருக்கெதிராக முறைப்பாடு செய்யுங்கள் என்ற வகையிலேயெ வெளியிட வேண்டும்.
எல்லோரையும் பாதிக்கின்ற வகையில் அறிக்கை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.
சில கிராம உத்தியோகத்தர்களது குடும்பங்களும் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.
அதை ஒரு புறம் வைத்து விட்டுத்தான் இவர்கள் பணி புரிகின்றார்கள். கிராம உத்தியோகத்தர் பற்றாக்குறை காரணமாக தமது பிரிவுக்கு மேலதிகமாக சிலர் இன்னொரு பிரிவையும் கவனிக்கின்றனர். இந்த விடயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வாரத்தில் 6 நாட்கள் பணிபுரியும் கிராம உத்தியோகத்தர்கள் ஏனைய சில சேவையாளர்களை ஒப்பிடுகையில் குறைந்த சம்பளமே பெறுகின்றனர் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்
எனவே, ஒட்டு மொத்த கிராம உத்தியோகத்தர்களும் பாதிக்கப்படும் வகையில் செய்திகளை வெளியிடாது தவறு செய்வோர் குறித்து மட்டும் தகவலைச் சேகரிக்கும் வகையில் செய்திகளை வெளியிடுவது பொருத்தம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு
அனர்த்த மீட்பு நடவடிக்கைகளின் போது, இடிபாடுகளுக்குள் இருந்து இராணுவத்தினர் கண்டுபிடித்த பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட 300,000 ரூபாய் பணம் மற்றும் சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் என்பனவே அதற்கு சொந்தமான உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஹங்குராங்கெத்த பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டு அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர், முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளின் போது இந்த பெறுமதியான பொருட்களைக் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
மண்சரிவு காரணமாக முழுமையாக அழிந்துபோன ஒரு வீட்டின் இடிபாடுகளுக்குள் இருந்து குறித்தப் பொருட்கள் மீட்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
அவற்றை நேற்றைய (14) உரிமையாளரிடம் இராணுவத்தினரால் முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்
நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படவுள்ள 5,000 ரூபாய் போசாக்குக் கொடுப்பனவை வழங்கும் பணிகள் நாளை (16) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த திட்டத்தின் உத்தியோகப்பூர்வ ஆரம்ப நிகழ்வு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலைமையில் நாளை காலை 9.30 மணிக்கு வெள்ளவத்தை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.
2025 நவம்பர் 30 ஆம் திகதி வரை மகப்பேறு சிகிச்சை நிலையங்களில் பதிவு செய்துள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஒரு முறை மாத்திரம் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள காலி மாநகர சபையின் வரவு செலவுத் திட்டமும் தோல்வி !!
காலி மாநகர சபையில் 36 உறுப்பினர்கள் உள்ளனர், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 17 வாக்குகளும் எதிராக 19 வாக்குகளும் பெறப்பட்டன.
பிரதான கூட்டம் இன்று காலை மேயர் சுனில் கமகே தலைமையில் நடைபெற்றது.
அதன்படி, நடைபெற்ற வாக்கெடுப்பில் 2 வாக்குகள் பெரும்பான்மையால் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது.
அப்போது, தேசிய நீர் அதிகாரசபையின் 17 உறுப்பினர்கள் பட்ஜெட் ஆவணத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர், அதே நேரத்தில் சமகி ஜன பலவேகயவின் 9 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 5 உறுப்பினர்கள், இலங்கை பொதுஜன பெரமுனவின் 3 உறுப்பினர்கள் மற்றும் இலங்கை பொதுஜன ஐக்கிய பெரமுனவின் 2 உறுப்பினர்கள் பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.
காலி மாநகர சபை தேசிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன ஐக்கிய பெரமுனவால் இணைந்து நிறுவப்பட்டது, மேலும் துணை மேயராக நியமிக்கப்பட்ட திரு. பிரியந்த சஹாபந்து, மாநகர சபையை நிறுவுவதற்கு இலங்கை பொதுஜன பெரமுனவின் ஆதரவைத் தெரிவித்ததோடு, வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகவும் வாக்களித்தார்.

நாளை மறுதினம் பல இடங்களுக்கு நீர்வெட்டு
மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 15 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் தொடர்பான நீர்க்குழாய்களை இடமாற்றும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, எதிர்வரும் புதன்கிழமை (17) பிற்பகல் 4.00 மணி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி காலை 7.00 மணி வரை இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதியைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று இவ்வாறு Takafumi Kadonவைச் சந்தித்தார்.
நாடு வங்குரோத்து நிலையைச் சந்தித்த வேளை, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியான்மைகள் மற்றும் தொழில்முனைவோரை தொழில் ரீதியாக கட்டியெழுப்புவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 100 மில்லியன் டொலர் தொகையை நன்கொடையாகப் பெற்றுத் தந்தமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது Takafumi Kadonoக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அவ்வாறே, தற்போதைய பேரிடர் நிலையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆசிய அபிவிருத்தி வங்கியின் இந்நாட்டுப் பிரதிநிதியான Takafumi Kadonoக்கு எடுத்துரைத்ததோடு, இந்த இக்கட்டான நேரத்தில் ஒரு நாடாக நாம் மீண்டும் எழுந்து நிற்பதற்குத் தேவையான ஆதரவுகளைப் பெற்றுத் தருமாறும் அவர் கௌரவமாகக் கேட்டுக் கொண்டார்.

நாட்டைவிட்டு புறப்பட்டது அமெரிக்க, இந்திய விமானங்கள்
நாட்டில் நிலவிய பாதகமான காலநிலையால் ஏற்பட்ட பேரிடர் காரணமாக கடந்த சில நாட்களாகவே மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அமெரிக்க விமானம் மற்றும் இந்திய ஹெலிக்கொப்டர்கள் தங்களது பணிகளை நிறைவு செய்த பின்னர் நாட்டை விட்டு புறப்பட்டுள்ளன.
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் தேடுதல் - மீட்பு, நிவாரணப் பொருட்கள் விநியோகம் மற்றும் அவசர உதவி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்த விமானம் மற்றும் ஹெலிக்கொப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.




